Monday, October 13, 2008
எச்சரிக்கை! செல்பேசி- முல்லைத் தமிழ்
உயிர்-ஆங்கிலமூலம்: ஆபிரகாம்.தொ.கோவூர் / தமிழாக்கம்: தமிழநம்பி
உலகம் இடம்பெயரா நிலையினதென்றும் கதிரவக்கோளே இவ்வுலகைச் சுற்றிக்கொண்டிருக்கிறது என்றும் கூறும் கிறித்தவ மத நூலான ‘பைபிள்’ கருத்துக்களை எதிர்த்த 'குற்ற'த்திற்காகக் கலீலியோ கத்தோலிக்கத் திருச்சவையால் சிறைக்கனுப்பப்பட்டார்.
புடவியைப் பற்றிய இன்றைய நம் அறிவனைத்தும் வானியலரின் அறிவியல் ஆராய்ச்சிகளால் பெற்றவையேயன்றி, மத நூல்களிலிருந்து பெற்றவை அல்ல. இவ்வுலகம் மற்றைய கதிரவக் கோள்களைப் போலவே நானூறு கோடி ஆண்டுகளுக்கு முன்னர், விண்வெளித் துகள்களின் தொகுப்புத் திரண்மையால் உருவானதென்று வானியலர் கருதுகின்றனர். பின்னர், இவ்வுலகின் வெதண(temperature) வளிப்புரிய(atmospheric) நிலைகள் பொருத்தமானவையாக அமைந்தபோது வேதியல் வினைப்பாடுகளின் விளைவால் உயிர்த் தோற்றம் ஏற்பட்டது.
எரிமலை மற்றும் கதிரவ ஆற்றல்களின் தாக்கத்துடன், உலகின் மிகத்தொன்மையான வளிப்புரிய நிலையில் சதுப்புவளி(methane), குருவளி (ammonia), நீர் ஆகியவற்றிலிருந்து உயிர்க்கக்கூடிய உயிர்மப்பொருளின் (livable organic matter) மூலக்கூறுகள் உருவாயின. (நோபல் பரிசு பெற்ற முனைவர் அர்கோபிந்து கொரானாவும் முனைவர் சிரில் பொன்னம்பெருமாவும், உலகின் மிகத்தொன்மையான வளிப்புரிய நிலைகளை, அவர்களின் ஆய்வறைகளில் செயற்கையாக ஏற்படுத்தி உயிர்வாழக்கூடிய உயிர்மப்பொருளின் மூலக்கூறுகளை உண்டாக்குவதில் வெற்றி கண்டுள்ளனர்)
இம்மூலக்கூறுகள் காலப்போக்கில் மறுபகர்ப்புறவும், மெள்ள சேர்மவுயிரகவாக்கம் (slow oxidation) என்கின்ற மூச்சுயிர்ப்பு (respiration) மூலம் ஆற்றலை உண்டாக்கவுமான பண்புகளை வளர்த்துக் கொண்டன. மூச்சுயிர்க்கின்ற உயிர்மப்பொருள் உண்டாக்கிய இவ்வகை ஆற்றலையே நாம் உயிர் என்கின்றோம். மூச்சுயிர்த்துக் கொண்டு, உயிர்ப்பாற்றலை (vital energy) உருவாக்குகின்ற பொழுது உயிர்மப்பொருள் உயிரியாக (உயிர்வாழ்கின்ற ஒன்றாக) ஆகி விடுகின்றது.
மிகத் தொன்மைக் காலத்தில், நிலத்தில் உருவாகிய உயிர்மப் பொருளின் (organic matter) மூலக்கூறுகள் காலப்போக்கில் ஒற்றைக்கல உயிரிகளை (unicellular organisms) உருவாக்கின. இவையே, பல இலக்கக்கணக்கான ஆண்டுப் படிநிலை வளர்ச்சியின் விளைவாக, இன்றைய மரவடை மாவடை(flora and fauna)களைத் தந்துள்ளன.
புகழ்பெற்ற வான்பூதியலர் (astrophysicist) ஆர்லொ சேப்ளி, உயிர்கள் இருக்கக்கூடிய பல இலக்கக்கணக்கான கோள்கள் விண்வெளியில் இருக்கக்கூடும் என்று கூறுகின்றார். இக்கோள்களுள் சிலவற்றில், மாந்தனை விடப் படிநிலைவளர்ச்சியிலும் அறிவுத்திறத்திலும் மிகுந்த வளர்ச்சி பெற்ற உயிரிகள் இருக்கலாமெனவும் சொல்லுகின்றார். சில வான்பூதியலர், இவ்வுலகை அடைந்த எரிகற்கள் மற்றும் வால்விண்மீன்களின் வழியாக உயிர்க்கக்கூடிய உயிர்மப்பொருளின் மூலக்கூறுகள் இங்கு வந்தனவென்று கருதுகின்றனர்.
நிலவில் உள்ள நிலைமைகள் உயிர்நிலைப்புக்கு ஏற்பேய்வு இல்லாமை காரணமாக, நிலவிற்குச் சென்ற விண்செலவர்(astronauts), உயிரின் விளைவாக்கத்திற்குத் தேவையான கீழ்க்காணும் மூன்று பொருள்களையும் அவர்களுடன் எடுத்துச் சென்றனர். அம்மூன்று பொருள்கள்: 1. உயிர்க்கக் கூடிய பொருள் [புரத்துப்பயினம்(proteinic protoplasm)] 2. உணவு, நீர் வடிவில் உணவூட்டம் 3. உயிர்வளி(oxygen).
இம்மூன்றனுள் முதலாவதை அவர்கள் தங்கள் உடல்களிலும், மற்ற இரண்டையும் கொள்கலன்களிலும் எடுத்துச் சென்றனர். இவ்வுயிராக்கப் பொருள்களில் எதிலேனும் பற்றாக்குறை ஏற்பட்டிருந்தால் அவர்கள் இவ்வுலகிற்கு உயிருடன் திரும்பியிருக்க மாட்டார்கள்.
உயிரிகளின் கலன்(cell)களில் காணப்படும் இனிகம்(glucose), கொழுப்புகள், புரத்தம் போலும் ஊட்டமளிக்கும் பொருள்களின் மெள்ள சேர்ம வுயிரகமாக்கம் (மூச்சுயிர்ப்பு) உண்டாக்கும் ஆற்றலின் வடிவமே உயிர்! அது, உயிரிகளின் கண்ணறை எனப்படும் கலன்களில் (cells) நடக்கும் வேதிய எதிர்வினைகளின் விளைவாகும். இந்த, உயிர் உண்டாக்கும் மூச்சுயிர்ப்பு, மெழுகுத்திரி போல் எரிபொருளை எரிப்பது போன்றதிலிருந்து எவ்வகையிலும் வேறுபட்டது இல்லை. வேதிய எதிர்வினைகளின் வேகத்தில் மட்டுமே இரண்டிற்கும் வேறுபாடு உள்ளது.
ஓர் உயிரியின் உடலில் நிகழும் சேர்ம வுயிரகமாக்கம், எரிபொருள் எரிந்துகொண்டிருக்கின்ற வேகத்தில் நடைபெறுமானால், அதனால் ஏற்படும் உயர்வெதணம்(high temperature) உயிர்க்கக்கூடிய பொருளை அழித்துவிடும். மெழுகுப்பொருள் வேதியச்சிதைவு உறாதவரையில் அதைப் பலதடவைகள் எரியவிடவும் அவிக்கவும் செய்யலாம். அதைப்போன்றே, ஓர் உயிரின் உடலிலுள்ள புரத்துப்பயினீர்(protoplasm) சிதைவுறாமலிருந்தால் இறந்த உடலைச் செயற்கை வழிகளால் பலமுறை உயிர்பெறச் செய்ய முடியும்.
1963இல் அமெரிக்கத் திரைப்பட நடிகர் பீட்டர் செல்லர்சு ஏழுமுறைகள் இறந்தார். ஒவ்வொரு முறையும் மின்துகளிய நெஞ்சவியக்கியைப் (electronic pacemaker) பயன்படுத்தி உயிர்த்தெழுப்பப்பட்டார். ஏழாவது மறுவுயிர்ப்பின் பிறகு, அவர் மேலும் பல படங்களில் நடித்தது மட்டுமின்றி மேலும் இரு குழந்தைகளைப் பெற்றுக் கொண்டார். அவிக்கப்பட்ட ஒரு மெழுகுத்திரியை மீண்டும் எரியவிடும் நிகழ்ச்சியில், அவிக்கப்பட்டபோது மெழுகுத்திரியின் சுடர் விலகிப் போனதாகவும் மீண்டும் அதை எரிய விட்டபோது, அச்சுடர் திரும்பி வந்ததாகவும் நாம் சொல்லுவதில்லை.
அதைப்போலவே, பீட்டர் செல்லர்சு இறந்த ஒவ்வொரு முறையும் அவருடைய உடலைவிட்டு உயிர் பிரிந்தது என்பதும் பின்னர் உயிர்ப்பிப்பின் போது, அவ்வுடலுக்குத் திரும்பி வந்தது என்பதும் பொருளற்ற உரைகளே!
- தமிழநம்பி (thamizhanambi44@gmail.com)
Friday, October 10, 2008
வீட்டிற்குள்ளே சூழல் பாதுகாப்பு-வேணு சீனிவாசன்
நாம் வீட்டிற்குள்ளே இருக்கும் போது மிகவும் சுகமாக இருக்கிறோம், பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற உணர்வில் சிறிய மாறுதல்களை கவனிக்காமல் இருப்பது வழக்கம். ஆனால் முன்னெச்சரிக்கையோடு சில மாறுதல்களை கவனிக்க நாம் பழகிக் கொள்ள வேண்டும். இதன் மூலமாக பெரிய ஆபத்துக்களை தடுக்க முடியும். உதாரணமாக வீட்டிற்குள்ளே நாம் சுவாசிக்கும் காற்று அசுத்தம் அடைந்து உடலுக்கு தீங்கு விளைவிப்பதை உடனுக்குடன் அறிந்து கொள்ள சில எச்சரிக்கைகள் தேவை.
அவையாவன
1. வழக்கத்திற்கு மாறான, குறிப்பிடத்தக்க நாற்றம்
2. அழுகிய வாடை, அல்லது காற்றின் அடர்த்தி
3. காற்றின் சுற்றோட்டக்குறைவு
4. பழுதுபட்ட குளிர்பதனப் பெட்டி, குளிர்சாதன இயந்திரங்களின் இயக்கம்.
5. புகைபோக்கியில் ஓட்டை பெட்ரோல், டீசலை எரிக்கும் போது போதுமான அளவிற்கு காற்றோட்டம் இருந்து புகை வெளியே செல்லுகிறதா என்பதை கவனிப்பது.
6. வீட்டிற்குள்ளே இருக்கின்ற காற்றில் அதிக அளவு ஈரப்பதம்
7. வெளிச்சமோ அல்லது காற்றோ வராமல் கட்டப்பட்ட வீடுகள்
8. வீட்டில் எங்காவது பூஞ்சைக்காளான் மற்றும் ஸ்போர்கள் இருப்பது
9. புதுப்பிக்கப்பட்ட வீட்டிற்கோ அல்லது புதிய வீட்டிற்கோ சென்ற உடன் உடலில் ஏற்படும் மாறுதல்கள்.
10. வீட்டு உபயோகப் பொருட்களுக்கு புதிய வண்ணம் பூசிய உடன் அடிக்கடி ஏற்படும் தும்மல், கண் எரிச்சல்.
11. வீட்டிற்குள்ளே இருப்பதை விட வெளியே இருக்கும் போது உடல் ஆரோக்கியமாக இருத்தல்
இவற்றை சரியாக கவனிப்பதன் மூலமாக வீட்டிற்குள்ளே உண்டாகும் காற்றுமாசை கட்டுப்படுத்தவும், நமக்கு நோய் வராமல் தடுக்கவும் முடியும். நம்மைச் சுற்றியுள்ள இயற்கைச்சூழல் நமக்கு பலவிதமான நன்மைகளைச் செய்து வருகிறது. மரங்களும், செடிகொடிகளும் நாம் வெளிவிடும் ஏராளமான கரியமில வாயுவை கிரகித்துக்கொண்டு, பிராணவாயுவை வெளியிடுகின்றன. இதன் காரணமாக நம்மைச் சுற்றி உள்ள காற்று மண்டலத்தில் கரியமிலவாயுவின் அளவு பெருகுவது தடைசெய்யப்படுகிறது. சராசரி வெப்ப நிலை உயர்வு, சூழல் வெப்பநிலை உயர்வு போன்ற விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படுவது தாவரங்களின் சேவையினால் தடுத்து நிறுத்தப்படுகிறது.
சூரியனில் இருந்து வெளிப்படும் புறஊதாக் கதிர்கள் நமக்கு புற்றுநோயை ஏற்படுத்தும். இவ்வாறு நடக்காமல் காற்றுவெளியில் உள்ள ஓசோன் படலம் ஒரு கவசமாக இருந்து, புறஊதாக் கதிர்களை வடிகட்டி பூமிக்கு அனுப்பி வைக்கிறது. மண்புழுக்கள், சாணவண்டுகள், இன்னும் பெயர் தெரியாத நூற்றுக் கணக்கான உயிரினங்கள் மண்ணில் உள்ள கழிவுப்பொருட்களை உரமாக மாற்றுகின்றன. இதன் காரணமாக விவசாய நிலத்தின் சத்துக்கள் அதிகமாகின்றன. உற்பத்தி பெருகுகிறது.
பறவைகள், விலங்குகள், வண்டுகள், பூச்சிகள் ஆகிய உயிரினங்களைக் கொண்ட ஆரோக்கியமான சூழல், மனித வாழ்க்கைக்கு மிகவும் அவசியம். தாவரங்களில் மகரந்த சேர்க்கை ஏற்பட வண்டுகளும், பூச்சிகளும் உதவுகின்றன. பயிர்களை நாசம் செய்யும் வெட்டுக்கிளி, போன்ற பூச்சிகளை அழிக்க பறவைகள் பயன்படுகின்றன.
எரிபொருட்கள், கடல் உணவு, காட்டு விலங்குகள், கயிறுகள், ஆகியவற்றை காடுகள் மற்றும் கடல்கள் நமக்கு அளிக்கின்றன. இவை மட்டும் அல்லாமல், இயற்கையாக ஏற்படும் கழிவுகள், மனிதனால் ஏற்படும் குப்பைகள், கழிவுகள் ஆகியவற்றை அழிப்பதிலும் இயற்கை பெரும்பங்கு ஆற்றுகிறது. இவைகளை மனதில் கொண்டு நாம் சுற்றுச்சூழல் மாசுபடுவதை எல்லாவகையிலும் முழுமுயற்சி செய்து தடுப்பது அவசியம்.
- வேணு சீனிவாசன் (vennusrinivasan@gmail.com)
புவி வெப்பம் அதிகரிப்பது ஏன்?-மு.குருமூர்த்தி
குளிர் நாடுகளில் தாவரங்களுக்கு அதிகமான வெப்பம் தேவைப்படுவதால் கண்ணாடி வீட்டிற்குள் (green house) செடிகளை வளர்க்கிறார்கள். கண்ணாடி வெப்பத்தை எளிதில் கடத்துவது இல்லை. கண்ணாடி வீட்டிற்குள் புகுந்த வெப்பம் வெளியேற வழியில்லாமல் அங்கேயே தங்கிவிடுகிறது. இதனால் கண்ணாடி வீட்டிற்குள் எப்போதும் வெப்பம் அதிகமாகவே இருக்கும்.
நாம் வாழும் பூமியைச் சுற்றிலும் இருக்கும் காற்று மண்டலம்தான் சுவாசிப்பதற்கு ஆக்சிஜனை வைத்திருக்கிறது. பூமி அதிகமாக சூடாகிவிடாமலும், அதிகமாக குளிர்ச்சியடைந்து விடாமலும் சம நிலையை இந்த காற்று மண்டலம்தான் ஏற்படுத்துகிறது. நம்முடைய உடலுக்கு சட்டை எப்படியோ அதைப்போல பூமிக்கு காற்று மண்டலம்தான் சட்டையாக இருக்கிறது. காற்று மண்டலத்தில் ஆக்சிஜனுடன், கார்பன் டை ஆக்சைடு, நைட்ரஸ் ஆக்சைடு, மீத்தேன் ஆகிய வாயுக்களும் இருக்கின்றன. இந்த வாயுக்கள் கண்ணாடியைப்போல செயல்படுவதால் பசுமைக்குடில் வாயுக்கள் (greenhouse gases) என்று பெயர் வைத்திருக்கிறோம்.
சூரியனிடமிருந்து பூமிக்கு வரும் வெப்பத்தை மண், நீர், உயிரிகள் இவையெல்லாம் உறிஞ்சிக் கொள்கின்றன. உறிஞ்சிக்கொண்டவை போக மீதமுள்ள வெப்பம் பசுமைக்குடில் வாயுக்களால் வான்வெளிக்கே திருப்பிவிடப்படுகிறது. வான்வெளியில் கார்பன் டை ஆக்சைடு, நைட்ரஸ் ஆக்சைடு ஆகிய வாயுக்களின் அளவு அதிகரிக்கும்போது, பூமிப்பரப்பை நோக்கி திருப்பப்படும் வெப்பத்தின் அளவு அதிகரிக்கிறது. இதனால் பூமி இயல்பைவிட அதிகமாக வெப்பமடைகிறது. புவிவெப்பமடைவது இன்றைய உலகத்தின் தலையாய பிரச்சினையாகிப் போனது இப்படித்தான். இதைத் தவிர்க்க வேண்டுமானால், காற்று மண்டலத்திற்குள் தொழிற்சாலைப் புகை, வாகனக் புகை மூலம் மனிதகுலம் துப்பும் பசுமைக்குடில் வாயுக்களை குறைக்க வேண்டும்.
இன்னும் அறிந்து கொள்ள: http://www.epa.gov/climatechange/kids/version2.html
- மு.குருமூர்த்தி (cauverynagarwest@gmail.com)
http://www.keetru.com/science/environment/global_warming.php
சூரிய நடுக்கம்-மு.குருமூர்த்தி
பூமியின் நிலநடுக்கம் போலவே சூரியனின் மேல்புறத்திலும் அதிர்வுகள் ஏற்படுகின்றன. " 5 நிமிட அதிர்வு" என்று அழைக்கப்படும் ( 5 minute oscillation) அதிர்வில் 3 மில்லி ஹெர்ட்ஸ் அதிர்வு ஏற்படும். இது கோயில் கண்டாமணி அடித்து ஓய்ந்தும் தொடர்ந்து கேட்கும் ரீங்காரம் போன்றிருக்கும்.
சோலார் அண்ட் ஹீலியோஸ்பியர் (Solar and Helioshpere Observatory SOHO) ஆப்சர்வேட்டரி என்ற NASA-ESA ஆய்வுக்கூடம் இந்த அதிர்வுகளைக் கவனித்துக் கொண்டு வருகிறது. அதிர்வுகள் சூரியனில் எப்படி வெளிப்படுகிறது என்பதை அறிவதால் அதன் செயல்பாடுகளை அறிய முடியும் என்பது உள்ளக்கிடக்கை.
கலைக்கதிர் , ஜூலை 2008
- அனுப்பி உதவியவர் மு.குருமூர்த்தி (cauverynagarwest@gmail.com)
Tuesday, September 2, 2008
தலைவலி - மரு. இரா.கவுதமன்
உலகில் அதிகமாக மக்களை தாக்கும் நோய் தலைவலியேயாகும். ஒவ்வொரு மனிதரும், தலைவலியால் பாதிக்கப்-பட்டவராகவே இருப்பர். ஒரு சிலருக்கு தலைவலி அடிக்கடி வரும், ஒரு சிலருக்கு எப்பொழுதாவது வரும். ஒரு சிலருக்கு காலையில் வரும். ஒரு சிலருக்கு மாலையில் வரும். ஒரு சிலருக்கு ஒற்றை மண்டையில் வரும். ஒரு சிலருக்கு இருபுறமும் வரும். ஒரு சிலருக்கு முன் பகுதி தலையில் வரும். ஒரு சிலருக்கு பின் மண்டையில் வரும். ஒரு சிலருக்கு தூக்கம் கெட்டால் வரும். ஒரு சிலருக்கு தூக்கத்தி-லிருந்து திடீரென விழிக்க நேர்ந்தால் வரும். ஒரு சிலருக்கு வெயிலில் இருந்தால் வரும். ஒரு சிலருக்கு பனியில் நடந்தால் வரும். ஒரு சிலருக்கு மன உளைச்சலால் வரும். ஒரு சிலருக்கு நோயின் வெளிப்பாடாக வரும். ஒரு சிலருக்கு எந்தக் காரணமும் இல்லாமலே வரும். ஒரு சிலருக்கோ எப்ப வரும்? எப்படி வரும் என்று தெரியாது. ஆனால் அடிக்கடி வரும். வந்தால் மிகுந்த தொல்லையையும் சங்கடத்தையும் உண்டாக்-கும் இயல்புடைய நோய் இது. அதனால் சாதாரணமாக சங்கடம் உண்டாக்கும் நபர்களைப் பார்த்து, இந்த ஆளோடு பெரிய தலைவலியா போச்சு என்று பல நேரங்களில் பலர் சொல்லக் கேட்டிருக்-கிறோம். தலைவலியின் கல்யாண குணங்களை நோக்குவோம்.
நோய்க் காரணம்: தலைவலி கீழ்கண்ட ஏதாவது ஒரு நோயின் வெளிப்பாடாக வரலாம்.
1. இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைதல் (Hypoglyceamia): உண்ணும் உணவில் சர்க்கரை அளவு குறைந்தால் இரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும். அதனால் மூளைக்கு செல்லும் இரத்தத்திலும் சர்க்கரை அளவு குறையும். இதனால் மூளையின் செயல்பாடுகள் குறையும். அப்பொழுது அதிக அளவு இரத்தம் மூளைக்கு செல்லும் நிலை ஏற்படும். அதன் காரணமாக மண்டையின் உள்புற இரத்தக் குழாய்கள் விரிவடையும். அதனால் தலைவலி உண்டாகும்.
2. அதிக இரத்த அழுத்தம் (Hypertension): இதிலும் இரத்த அழுத்தத்தை குறைக்கும் விதமாக இரத்தக் குழாய்கள் விரிவடையும். இரத்த அழுத்தம் குறைக்கும் மாத்திரைகளும் இரத்தக் குழாய்-களை விரிவடைய செய்யும். அதனால் உள்மண்டை இரத்தக் குழாய்களும் விரிந்து தலைவலி ஏற்படும்.
3. இரத்தக் குழாய் நோய்கள (Vascular Disease): நீரிழிவு நோய், மிகு இரத்த அழுத்தம் போன்றவற்றில் இரத்தக் குழாயில் உப்பு, சர்க்கரை படிவங்கள் படிவதால் இரத்தக் குழாய், சுருங்கி விரியும் தன்மையை இழக்கிறது. அதனால் தலைவலி வரலாம்.
4. மன அழுத்தம் (Mental Tension): மன அழுத்த நோயிலும் மிகு இரத்த அழுத்தம் ஏற்பட்டு அதன்பின் விளைவாக தலைவலி வரலாம்.
5. உள்மண்டை இரத்தக்கட்டு (Oedeama - Intra Cranial): தலையில் அடிபடுவதால் உள்மண்டையில் இரத்தம் கட்டி, அது மூளையின் பகுதிகளை அழுத்துவ-தால் தலைவலி வரலாம்.
6. மூளைக் கட்டிகள் (Intra Cranial Tumous): மூளையில் உண்டாகும் கட்டிகள் மூளையையும், சுற்றியுள்ள இரத்தக் குழாய்களையும் அழுத்தும் தன்மை உடைய-தால் தலைவலி உண்டாகும்.
7. கண்பார்வைக் கோளாறுகள் (Refractive Errors): பெரும்-பாலோருக்கு தலைவலி ஏற்படும் முக்கிய காரணம் பார்வை கோளாறுகளேயாகும். பார்வைக் கோளாறு உள்ளவர்கள் கண்களை அதிக அளவு பயன்படுத்தும் நிலை ஏற்படும். இது தலைவலியை அதிக அளவு உண்டாக்கும். பார்வை நரம்புகள் மய்யம், மூளையின் பின்புறம் உள்ளதால், பார்வைக் கோளாறு உள்ளவர்களுக்கும் தலைவலி பெரும்பாலும் பின் மண்டையில் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
8. முகக் காற்றறை அழற்சி (Sinusitis) : சளி ஏற்படும் பொழுது காற்றறை அழற்சி ஏற்படும். சிலருக்கு தூசுகளால் அழற்சி ஏற்படும். இதில் மிகவும் அதிகமாக மேல்தாடை காற்றறை பாதிக்கப்-படும். இதனாலும் தலைவலி உண்டாகும். இது பெரும்பாலும் நெற்றி, பக்கவாட்டில் தலை-வலியை உண்டாக்கும். காற்றறைத் தலைவலி என்றே இதை கூறுவர்.
9. பல்நோய்கள் (Dental Diseases): சரியாக முளைக்காத மூன்றாம் கடைவாய் பல் தலையின் பக்க-வாட்டில் உள்ள சதைப் பகுதிகளில் அழுத்தம் ஏற்படுத்தும். இதனால் பக்கவாட்டில் தலைவலி ஏற்படும்.
10. ஒற்றைத் தலைவலி (Migrane): மிகவும் கடுமையான வலியான இது பெரும்பாலும் மன உளைச்சல் காரணமாகவே ஏற்படும். சிலருக்கு தலைமுறை வியாதியாக வரலாம். கழுத்திலும், தலைக்குச் செல்லும் இரத்த குழாய்கள் மன அழுத்தத்தால் விரிவடையும் இதனால் வலி ஏற்படும்.
மருத்துவர்கள் தலைவலியை வேறு வகை-யாக வகைப்படுத்துகின்றனர்.
1. இரத்தக் குழாய் தலைவலி (Vascular Headache) 2. உள்மண்டை மிகு அழுத்தத் தலைவலி (Increased Intra Cranial Tension) 3. மூளை உறை அழற்சி, மூளை அழற்சி (Inflamation) 4. தசைச் சுருக்கம் (Muscle Spasm) 5. பிற இடங்களில் இருந்து பரவும் தலைவலி (Referred Headache) என மருத்துவர்கள் தலைவலியை பாகுபடுத்தினாலும், தலைவலி நாம் ஏற்கனவே சொன்ன 10 காரணங்களில் ஒன்றால்தான் வரும். அவை மருத்துவர்களில் பாகுபாடுகளில் உள்ளடங்கியதாக இருக்கும்.
மேற்கூறிய காரணங்களால் மண்டையின் உள்புறம் உள்ள இரத்தக் குழாய்கள் விரிவடைகின்றன. எலும்பின் கட்டித் தன்மையால் ஓரளவிற்கு மேல் விரிவடைய முடியாததால் தலைவலி ஏற்படுகிறது. ப்ளுகாய்ச்சல், மூளை அழற்சி, மூளை உறை அழற்சி ஆகியவற்றில் மண்டையின் இரத்தக் குழாய் விரிந்து தலைவலி ஏற்படுத்தும். மலைப் பகுதிகளின் உயரம், பசி, இரத்தச் சோகை, மிகு இரத்த அழுத்தம் போன்றவையும் உள் மண்டை இரத்தக் குழாயில் விரிவை உண்டாக்கி தலைவலி ஏற்படுத்தும்.
மருத்துவம்: தலைவலி பெரும்பாலும் ஒரு நேரடியான நோய் இல்லை. எனவே தலைவலி என்றாவது ஒரு நாள் வந்தால் அதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால் அதுவே ஒரு தினசரி தொல்லையாகும் பொழுது, கட்டாயம் வேறு நோய்கள் ஏதேனும் இருக்கும். பல நேரங்களில் தொடர்ச்சியான தலைவலிக்கு சோதிக்கும் பொழுது, வேறு சில நோய்கள் இருப்பது தெரியவரும். அதனால் தலைவலிதானே என்று அலட்சியப் படுத்தாமல், சரியான சோதனைகளை செய்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானது. தலை வலிக்கும் பொழுது வலி மாத்திரைகள் சாப்பிட்டுவிட்டு, பேசாமல் இருப்பவர்களே அதிகம். இது தவறான பழக்கம். தலைவலி அடிக்கடி வந்தால் அதன் அடிப்படை மூலகாரணம் என்னவென்று ஆய்ந்து, அதற்கான மருத்துவம் செய்து கொண்டாலே தலைவலி தானே சரியாகி விடும். எடுத்துக்காட்டாக பார்வைக் கோளாறால் வரும் தலைவலி, பார்வைக் கோளாறை சரி செய்வதால் சரியாகிவிடும்.
அதேபோல் ஒற்றைத் தலைவலி சரியான மருத்துவ ஆலோசனைப்படி மருந்துகள் சாப்பிடுவதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.
சரியான ஆய்வுகளும், சரியான மருத்துவமும் செய்து கொண்டால், தலைவலி நமக்கு ஒரு பெரிய தலைவலியாக மாறாமல் குணமடையும் என்பது நிச்சயம்.
நன்றி:உண்மை
செயற்கை ரத்தம்: விஞ்ஞானிகள் சாதனை
கருவை உருவாக்கும் (Emryonic) செல்களிலிருந்து சிவப்பணுக்களை உற்பத்தி செய்து அதன்மூலம் செயற்கை ரத்தம் உருவாக்கப்படுகிறது.
இதற்கு முன்பும் பரிசோதனைக் கூடத்தில் செயற்கை ரத்தம் உருவாக்கப்பட்டது. ஆனால், அதில் முழுமையாக வெற்றிபெற முடியவில்லை. அந்த ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் இயற்கையான சிவப்பணுக்களைப்போல் செயல்படாமல் புற்றுநோய் செல்களாக மாறிவிட்டன.
ஆனால், தற்போது உருவாக்கப்பட்ட சிவப்பணுக்கள் மனித ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களைப் போல் செயல்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதற்கான ஆராய்ச்சியை அமெரிக்கா - சிகாகோவில் உள்ள இலினாய்ஸ் பல்கலைக் கழகமும் ரோசெஸ்டரில் உள்ள பயோ கிளினிக்கும் இணைந்து மேற்கொண்டன. மனித ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களைப் போல் செயற்கை ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களும் ஆக்ஸிஜனை வழங்குகிறது.
புதிய கண்டுபிடிப்பு மூலம் ரத்தச் சிவப்பணுக்களை பெருமளவில் தயாரிக்க முடியும். அவ்வாறு பெரும் அளவில் சிவப்பணுக்கள் தயாரிக்கப்படும்போது மனித ரத்தத்துக்கு பதில் செயற்கை ரத்தத்தைப் பயன்படுத்த முடியும்.
செயற்கை ரத்தம் பயன்பாட்டுக்கு வரும்போது ஏராளமான உயிர்களைக் காக்க முடியும். அதோடு ரத்ததானம் மூலம் சோதனை செய்யப்படாமல் செலுத்தப்படும். ரத்தம்மூலம் எச்.அய்.வி., மஞ்சள் காமாலை உருவாக்கும் ஹெப்படைட்டீஸ் பி கிருமிகள் தொற்ற வாய்ப்புள்ளது. ஆனால், செயற்கை ரத்தம் மிகவும் சுத்தமானதாக இருக்கும்.