Showing posts with label உடல். Show all posts
Showing posts with label உடல். Show all posts

Thursday, April 2, 2009

சுவைகள் ஆறு அல்ல இருபத்தைந்து - முனைவர். க. மணி

இனிப்பு, கசப்பு, கார்ப்பு, உவர்ப்பு, புளிப்பு மற்றும் துவர்ப்பு என்று ஆறுவித சுவைகளை நமது நாக்கு அறியக்கூடியது என்று சொல்வதுண்டு. மேலைநாட்டவர்களின் மொழிகளில் சுவைகள் ஐந்து மட்டும்தான் உள்ளன. அவர்கள் துவர்ப்புச் சுவையை விட்டு விட்டார்கள். இது இப்படியிருக்க ஜப்பானியர்கள் "யுமாமி" என்ற ஒரு சுவையைக் குறிப்பிடுகிறார்கள். இந்தச் சுவை மாமிசம் சாப்பிடும்போது அனுபவிக்கும் சுவை என்பது அவர்கள் விளக்கம். இதையறிந்ததும் ஆங்கிலத்தில் சேவரி (Savory) என்று புது சுவை உணர்வை அவர்கள் மொழியில் சேர்த்துக் கொண்டார்கள். உண்மையில் நமது நாக்கு 25 க்கும் மேற்பட்ட சுவைகளை உணரக்கூடியது. அத்தனைக்கும் நம் தமிழில் பெயர்கள் இல்லை.

இனிப்புச் சுவையுடைய சக்கரைப் பொருள்கள் உடலும் மூளையும் தொடர்ந்து வேலை செய்வதற்குத் தேவையான எரிசக்தியை வழங்குகின்றன. உப்புச்சுவை இரத்தத்திற்கு வேண்டிய "எலெக்ட்ரோலைட்" எனப்படும் உலோக அயனிகளை வழங்குகி
Tasteறது. இரத்தத்தில் உப்பு அளவு குறைந்தால் இதயம் தாறுமாறாகத் துடிக்க ஆரம்பித்துவிடும். சேவரி அல்லது யுமாமி என்று அழைக்கப்படும் மாமிசச் சுவை (தமிழில் இதற்கு இணையான சொல் இல்லை) உடலுக்கு உரம் தரும் புரதத்தை வழங்கும் பொருள்களுக்குச் சொந்தமானது. எனவே இனிப்பு, உவர்ப்பு, சேவரி (சைவ உணவுப் பழக்கமுடையவர்களுக்கு பருப்பிலிருந்து அந்தச் சுவை கிடைக்கிறது) ஆகிய மூன்றையும் நாம் விரும்பிச் செல்கிறோம்.

மனிதன் வேட்டைக்காரனாக வாழ்ந்த காலத்தில் இம்மூன்று சுவைகளையும் நாடி ஒடித் திரிந்ததில் ஒரு காரணமிருக்கிறது. அன்று அவனுக்கு கரும்பாலையோ, உப்பளங்களோ, பிராய்லர் கோழிக்கடைகளோ கிடையாது. உடம்பில் உயிர் தரித்திருக்க வேண்டுமானால் மேற்கூறிய மூன்று சுவைகளும் அவனுக்கு முக்கியம். இன்றும் அதே மூன்று சுவைகள் நம்மை ஆட்டிப் படைப்பதால் அளவின்றி அவற்றைப் புசித்து சக்கரைநோய், மனப்பதற்றம் மற்றும் மாரடைப்பு போன்ற நோய்களால் துன்புறுகிறோம்.

ஐஸ்கிரீம் வேண்டும் ஆனால் அதில் சக்கரையிருக்கக் கூடாது, ஊறுகாயில் உப்பு உறைக்க வேண்டும் ஆனால் அதில் உப்பு இருக்கக்கூடாது, மாமிசச் சுவைவேண்டும் ஆனால் சைவமாக இருக்கவேண்டும் என்று எல்லோருக்கும் ஆசையிருக்கிறது. இது சாத்தியமா?

நாம் நாக்குக்கு அடிமைதான். அதிலிருந்து நம்மால் விடுபட முடியாது. நாக்கின் பிடியிலிருந்து தப்பிக்க ஒரு வழியிருக்கிறது. துளி சக்கரை போட்டாலும் அது இரண்டு கரண்டி சக்கரையின் இனிப்பைத் தரவேண்டும்; சிட்டிகை உப்பிலிருந்து கால்கரண்டி உப்பின் கரிப்பு கிடைக்க வேண்டும்; மாமிசமே இல்லாமல் மாமிச சுவையை ஏதாவது தரவேண்டும். இப்படி ஒரு தந்திரம் கிடைத்து விட்டால் கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம், எடை கூடுவது போன்ற பிரச்சனையில்லாமல் நாம் இஷ்டம்போல சாப்பிடலாம். எப்படி சக்கரைக்கு அதிகமாக இனிப்பைத் தருவது? உப்புக்கு எப்படி அதிக உவர்ப்பைத்தருவது, மாமிசத்திற்கு எப்படி திகட்டும் அளவுக்கு அதிக சுவையூட்டுவது.. ?

மோனோசோடியம் குளுட்டமேட் என்ற உப்பினை இப்போது பிரியாணி போன்ற புலால் சமையல்களில் சேர்த்துக் கொள்கிறார்கள். அஜினோமோட்டோ என்றால் உங்களுக்கு உடனே தெரியும். அஜினோமோட்டடோ தரும் சுவையைத்தான் சேவரி என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுகிறார்கள். அஜினோமோட்டோ மாமிசச் சுவையை அதிகரிக்கச் செய்கிறது. இதுபோல சக்கரையின் இனிப்பை தூக்கலாக்க ஒரு பொருள் இருந்தால் இரண்டு கரண்டி சக்கரை போடுமிடத்தில் அரைக் கரண்டி அல்லது அதற்கும் குறைவை போட்டுச் சமாளிக்கலாம்.

சேக்கரைன், அஸ்பார்ட்டேம் போன்றவை செயற்கையாக இனிப்பைத் தருபவை. அவை பொய்யானவை. அவை தரும் இனிப்பு சக்கரைபோல இருப்பதில்லை, இதனால்தான் சக்கரை நோய்க்காரர்கள் வேண்டா வெறுப்பாக செயற்கை இனிப்பைப் பயன்படுத்துகிறார்கள்.

சுவை மொட்டுகள்

பள்ளிக்கூடப் புத்தகங்களில், நாக்கின் படம்போட்டு, அதில் பல பகுதிகளை கோடிட்டுக்காட்டி இந்த இடத்தில் இனிப்பு, இங்கே கசப்பு, இங்கே காரம்.. என்று குறிப்பிட்டிருப்பார்கள். அடிநாக்கில் கசப்பு உணர்வு இருப்பதாகவும் அதில் சொல்லப்பட்டிருக்கும். அப்படி நாக்கில் சுவைகளுக்கான மேப் எதுவும் இல்லை என்று சார்லஸ் ஸூக்கர் (1996 Charles Zuker, Professor of Biology. University of California) என்பவர் கண்டுபிடித்தார். நாக்கில் எல்லா இடத்திலும் எல்லா சுவைகளையும் அறியமுடியும்; இனிப்பு. புளிப்பு, கசப்புக் கென்று தனித்தனி இடங்கள் ஏதும் ஒதுக்கப்படவில்லை என்பதைத் தெரிவித்தார். நம் நாக்கின் மேல்பரப்பு சுற சுறப்பாக இருக்கிறதல்லவா, அவையாவும் மொட்டு வடிவ மேடுகள். அவற்றை சுவை அரும்புகள் அல்லது சுவை மொட்டுகள். ஒவ்வொரு சுவை மொட்டிலும் நூற்றுக்கணக்கான செல்கள் உள்ளன. அச்செல்கள் மூலம் நாம் ஆறு அல்ல 25 வகை சுவைகளை அறிகிறோம்.

Taste
ஒவ்வொரு சுவைக்கும் தனியாகச் செல்கள் உண்டு. அதாவது ஒரு செல் ஒரு சுவையை மட்டும் அறியும். அதன் வேலை உணவில் உள்ள குறிப்பிட்ட சுவையை அறிந்து தகவலை மூளைக்கு அனுப்புவது. ஒரு மொட்டு ஒரு சுவைக்கு என்பதும். குறிப்பிட்ட நாக்குப்பகுதி ஒரு சுவையை மட்டும் அறியும் என்பதுதான் தவறான கருத்து. நாக்கில் எல்லா பகுதியிலும் உள்ள எல்லா மொட்டுகளிலும் 25 வகை சுவைகளை அறிவதற்கான செல்கள் உள்ளன.

சுவை உணரும் செல்களின் மேற்புறத்தில் உள்ள சவ்வில் சுவையை அறிவதற்கான புரதங்கள் நிறைய உள்ளன. பாயாசத்தில் முந்திரிப்பருப்பு மிதப்பதுபோல (கொஞ்சம் அதிகமாகவே) சுவை அறியும் புரதங்கள் செல்லின் வெளிச் சவ்வில் மிதந்தபடியுள்ளன. இப் புரதங்களின் முப்பரிமான வடிவம் ஒரு கிண்ணம்போன்றது. ஒரு சுவைக்கு ஒரு கிண்ணம் என்று 25 சுவைகளுக்கும் தனித்தனி கிண்ணங்கள் உள்ளன. தேனை நக்கும்போது குறிப்பிட்ட கிண்ணத்தின் பள்ளத்தில் சுவைக்குக் காரணமான மூலக்கூறு வந்து உட்காரும். சாடிக்கு ஏற்ற மூடி போல புரதமும் அதன் சுவை மூலக்கூறும் ஒன்றுடன் ஒன்று டக் கென்று பொருந்திக்கொள்கின்றன. பூட்டும் சாவியும், காலும் செருப்பும் என்றுகூட வைத்துக்கொள்ளலாம். இதனால் இந்தக் கிண்ணங்களை "ஏற்பி" என்கிறார்கள். அறிஞர் ஸூக்கர், நாக்கிலுள்ள சுவை ஏற்பிகளை எல்லாம் பிரித்து ஆராய்ந்து பார்த்தபோது மனிதருக்கு 25 வகைக்கும் மேற்பட்ட ஏற்பிகள் இருப்பதை அவர் அறிந்தார். அதனடிப்படையில் நம்மால் அத்தனைவகை சுவைகளையும் அறிய முடியும் என்று அவர் குறிப்பிடுகிறார். அவற்றை நாம் தொகுத்து ஆறு அல்லது ஐந்து சுவை வகைகளாகப் பிரித்துக்கொள்கிறோம். உண்மையில் கன்னல், தேன், திராட்சை, மாம்பழம், பலா, சப்போட்டா ஆகியவை அனைத்தும் இனித்தாலும் அவற்றில் ஒன்றுக்கொன்று வித்தியாசமாக அல்லவா இருக்கின்றன.

இந்தக் கட்டுரையின் முக்கியமான இடத்திற்கு வந்துவிட்டோம். ஸூக்கர் சுவை ஏற்பி மூலக்கூறுகளை கூர்ந்து ஆராய்ந்தபோது ஒவ்வொன்றின் கிண்ணப்பகுதியிலும் இரண்டு அறைகள் இருப்பதைப் பார்த்தார். ஒரு அறை சுவைக்குக் காரணமான சக்கரை, உப்பு, அமிலம், கசப்பு, துவர்ப்புச் சுவைகளின் மூலக்கூறுகள் அமர்வதற்காகவும் அருகே உள்ள இன்னொரு சிறிய அறை சுவையில்லாத ஆயினும் சுவை உணர்வை பலமாகத் தூண்டிவிடும் இன்னொரு பொருளுக்காகவும் இருப்பதைக் கண்டுபிடித்தார். அஜினோமோட்டோ என்ற உப்பு தன்னளவில் சுவையற்றதாக இருந்தாலும் மாமிச உணவில் கலந்ததும் மாமிசத்தின் சுவை பன்மடங்கு கூடுவதன் இரகசியம் இதுதான்.

இதன்படி பார்த்தால், இயற்கையில் சுவைகளைக் கூட்டுவதற்கென்றே பல பொருள்கள் இருக்கும்போலத் தோன்றுகிறது. இல்லாவிடில் ஏன் சுவை உணரும் ஏற்பிகளில் இரட்டை அறை அமைப்பு இருக்கவேண்டும்?

மேலும் ஆராய்ச்சிகள் மேற் கொண்டால் சுவை ஏற்பிகளின் இரண்டாம் அறையில் அமரக்கூடிய சுவைத்தூண்டிகள் எவை என்பதை அறிந்து கொள்ளலாம். சக்கரை முதலான பொருள்களின் சுவைகளை பலமடங்காக அதிகரிக்கச் செய்யலாம். மேலும் முயன்றால் கசப்பின் வீச்சையும் தணிக்கலாம். அதன்பிறகு எல்லோர் வீட்டிலும் மாதம் 5 கிலோ சக்கரைக்கு பதிலாக கால் கிலோதான் வாங்குவார்கள். துளி உப்பு போதும் என்று திருப்தியடைவார்கள். கசப்பையும் வெறுக்காமல் உண்பார்கள். மொத்தத்தில் மனிதன் உணவினால் கெட்டுப்போகாமல் வாழ்நாள் (சிறிதனாலும்) நோயின்றி வாழ்வான்.

நன்றி: சைன்டிஃபிக் அமெரிக்கன்.

முனைவர். . மணி (kmani52@gmail.com)
பயிரியல்துறை. பி எஸ் ஜி கலை அறிவியல் கல்லூரி. கோயம்புத்தூர்

http://www.keetru.com/science/earth/mani.php

Thursday, March 5, 2009

உண்ணத் தெரியுமா? - திருமதி. டி.எஸ்.குஞ்சிதம் குருசமி பி.ஏ.எல்.டி

நீ பெரிய சாப்பாட்டு இராமன்; மூக்கை பிடிக்க சாப்பிடத்தான் தெரியும்என்று அடிக்கடி கேட்கிறோமல்லவா? இது ஒரு தப்பான பாராட்டுரை.ஏனேனில் 100 க்கு 99 பேர்ருக்கு சரியாக சாப்பிடத் தெரியாது.

கால் நடைகளுல், பறைவகளுல், மற்ற உயிர்களும் கூடத்தான் தங்கள் பசி தீர்வதற்காக எதையோ தின்று கொண்டிருக்கின்றன. இவைகளைப் போல் மனிதனும் கிடைத்ததைத் தின்று கொண்டிருந்தால் போதுமா?

நம் நாட்டில் போதிய அளவு உண்பதற்கே பலருக்கு உணவு கிடைப்பதில்லை. இந்நிலையில் நல்ல உணவாக சாப்பிட வேண்டும், சத்துள்ள உணவாக சாப்பிட வேண்டும் என்றெல்லாம் கூறினால் எத்தனை பேரால் முடியும்?

உலகில் மிகுந்த மரணவிகிதமும், குறைந்த வயதில் மரணம் நேரிடுவதும் உள்ள நாடு இந்தியாதான். காரணம், வறுமை மட்டுமல்ல நோய் நொடிகளும் கூட நோய்களில் பெரும்பாலாவை உணவினால் ஏற்படுகின்றது என்பது உலக உணவாராய்ச்சி நிபுணர்களின் முடிவு.

உண்ணத்தெரிதல்

ஏழைகளாயிருப்பவர்கள்கூடத் தம் வசதிக்கேற்ற அளவுக்காவது நல்ல முறையில் சாப்பிடத் தெரிந்து கொள்ள வேண்டும்.

உதாரணமாக, விலை உயர்ந்த ஆப்பிளும், ஆரஞ்சுப்பழமும் தின்னமுடியாவிட்டாலும், இவைகளில் எந்த வகையிலும் குறைவில்லாத உயிர்ச்சத்துக் (வைட்டமின்) கொண்ட வாழைப்பழம், மிகுந்த அளவுக்கு உப்புச்சத்தும்(மினரல்ஸ்), சுண்ணாம்புச் சத்தும்(கால்சியம்) உயிர்ச்சத்தும் கொண்ட முளைக்கீரை- அரைக்கீரை கூடவா ஏழைக்கு கிடைக்காது?எல்லாப் பருப்புகளிலும் மிகுதியான பிசிதம்(ப்ரோட்டின்) என்ற சத்துக் கொண்ட வேர்கடலை கூடவா ஏழைக்கு கிடைக்காது?

ஆதலால் எவ்வளவு உண்ண வேண்டும் என்பதல்ல முதன்மை! எதையுண்ண வேண்டும்?என்பதில்தான் முதன்மை இருக்கிறது.

நல்ல உடற்கட்டோடு வாழ்வதற்கு பல்வகைச் சத்துகளும்ஏறத்தாழ விகிதாசார அளவுக்காவது இருக்கக்கூடிய உணவை உட்கொள்வதுதான் அறிவுடைமை. மனிதன் பகுத்தறிவு உடையவன் என்பதற்கு மற்றத்துறைகளில் எப்படி இருந்தாலும் உயிர்வாழ்வதற்கு முதன்மையான உணவோடாவது அறிவோடு நடந்து கொள்ள வேண்டாமா? மாட்டுக்கு தெரியாது, வெறும் வைக்கோலில் மட்டும் சத்தில்லை என்ற உண்மை; பருத்திக் கொட்டையும் ,புண்ணாக்கும், தவிடும், பசும்புல்லும் கலந்து தின்றால்தான் தன் உடல் சீர்பட்டிருக்கும் என்று தெரியாது. ஆனால், மனிதனுக்கு தெரிய வேண்டாமா, வெறும் சோற்றில் மட்டும் சத்துக் கிடையாது என்ற உண்மை?

சீரான உணவு

சீரான உணவில் என்னென்ன இருக்க வேண்டும்?

தானியம்

14 அவுன்ஸ்

பருப்பு வகை

3 அவுன்ஸ்

கீரை வகை

4 அவுன்ஸ்

கிழங்கு வகை

3 அவுன்ஸ்

காய்கறி

3 அவுன்ஸ்

பழவகை

3 அவுன்ஸ்

பால்

10 அவுன்ஸ்

சர்க்கரையும் வெல்லமும்

2 அவுன்ஸ்

நெய், எண்ணெய்

2 அவுன்ஸ்

மீனும் இறைச்சியும்

3 அவுன்ஸ்

முட்டை

1 (ஒன்று)

சத்துணவு ஆராய்ச்சி குழுவின் முடிவுதான் மேலே குறிப்பிட்டுள்ளது.

உணவில் இத்தனை வகைகளா இருக்க வேண்டும்?என்று கேட்கலாம். ஆம்! ஆம்! நூறு தடவை ஆமாம்!

ஒரு உணவுப் பொருளில் இருக்கும் சத்து மற்றொன்றில் இல்லை. ஆதலால்தான்.

உணவுப்பொருளகளில், நீர், பிசிதம்(ப்ரோட்டின்), கொழுப்பு(ஃபாட்), மாச்சத்து (கார்போ ஹைட்ரேட்), உப்புச்சத்து(மினரல்ஸ்), உயிர்ச்சத்து(வைட்டமின்) ஆகிய ஆறுவகை சக்திகள் இருக்கின்றன. இந்த ஆறும் சரியான அளவுக்கு கலந்துள்ள உணவுதான் சிறப்பான உணவு.

ஆறின் விளக்கம்:

1) நீர்: நம் உடற் கூற்றின் முக்கால் பங்குக்கு மேல் நீர்தான்; குருதியில் 90% நீர்தான்; போதுமான அளவுநீர் அருந்தாவிடில் மலச்சிக்கல் ஏற்படும். கொதித்து, ஆறிய, வடிகட்டிய நீர், நாளும் குறைந்தது 8 டம்ளராவது குடிக்க வேண்டும்.

2) ப்ரோட்டின்: இதை பிசிதம் என்றும் புரதம் என்றும் தமிழில் கூறுவதுண்டு. உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாதது; உணவு ஆற்றல்களிலேயே சிகரமாயுள்ளது; மனிதனின் ஆற்றலில் அடிப்படியானது; நடுத்தர வயதுள்ள மனிதனுக்கு, நாள் ஒன்றுக்கு சுமார் இரண்டு பலம் எடையுள்ள புரதமாவது உடலில் சேர்வது மிகவும் தேவையானது. இது மிகுந்துள்ள பொருட்கள்- இறைச்சி, மீன், முட்டை, பால், பருப்புவகை, கொட்டைவகை(பாதாம் பருப்பில்21%ம், வேர்க்கடலையில் 27%ம், அரிசியில் 6%ம், கோதுமையில் 12%ம் உண்டு).

3) கொழுப்பு: நம் உடல் உறுப்புகள் அன்றாடம் தம் பணியை செய்வதற்கான ஆற்றலை வழங்குவது இது. பெரும்பாலான இந்திய உணவு வகைகளில் இந்த சத்து மிகக் குறைவாகவே இருக்கிறது. எண்ணெய் வித்துகள், கொட்டைகள், வெண்ணெய், நெய் முதலியவற்றில் மிகுந்திருக்கிறது. நல்லெண்ணெயிலும், வேர்க்கடலையிலும் பெரிய அளவுக்கு இருக்கிறது.

4) மாச்சத்து: மனித இயந்திரத்தை இயக்குவிக்கின்ற முக்கியமான சத்து இது. உணவுத்தானியங்கள், கிழங்குகள், வெல்லம், சர்க்கரை, க்ளுகோஸ் முதலியவற்றின் 100 க்கு 100 இந்த மாச்சத்து இருக்கிறது.

5) உப்புச்சத்து: இதை கனிமப்பொருள் என்றும் கூறுவர். மேலே கூறிவற்றைப்போல் உடலுக்கு ஆற்றல் ஊட்டக்கூடியதல்ல இது. எலும்பு, பல் முதலியவற்றை உறுதியாக்குவதற்கு பயன்படுகிறது. நம் உடலில் சுண்ணம்புச்சத்து, இரும்புச்சத்து, கனலம்(பாஸ்பரஸ்) முதலிய முப்பதுக்கும் மேற்பட்ட கனிமப்பொருள்கள் உள்ளன. சுண்ணாம்புச்சத்தும், இரும்புச் சத்தும் கீரையில் ஏராளமாக இருக்கின்றன. அடுத்தபடியாக கேழ்வரகு, பருப்பு இவைகளிலுமிருக்கின்றன.

6) உயிர்ச்சத்து(வைட்டமின்): இது ஏ, பி, சி, டி, இ, கே என்று பிரிக்கப்பட்டிருக்கிறது, உடம்பில் நோயில்லாமல் இருப்பதற்கு இச்சத்து இன்றியமையாததயிருக்கிறது. கொழுப்பில் கரைகின்ற உயிர்ச்சத்து, தண்ணீரில் கரைகின்ற உயிர்ச்சத்து என இரு வகைகளாக இதைப் பிரிக்கலாம். வெண்ணெய், முட்டை மஞ்சள் கரு, ஈரல், மீன், இறைச்சி, கீரைகள், காரட், தக்காளி, ஆரஞ்சு, மா, பலா, பப்பாளி ஆகிய பழங்களிலும் வைட்டமின் மிகுந்திருக்கிறது.

மிகவும் தீட்டப்படாத தானியங்கள், பருப்புகள், கொட்டைகள், முட்டை, இறைச்சி முதலியவற்றில் பி வைட்டமின் மிகுந்திருக்கிறது. தவிட்டுடன் கூடிய அரிசியை புழுங்களாகவும், பொங்கியும் உண்டால் பி வைட்டமின் சுமாரளவுக்கேனும் கிடைக்கும். இன்று 100க்கு 99 பேர்களால் உண்ணப்படுகின்றசலவைச் சோற்றில் (தவிடு நீக்கப்படுவதானாலும்) இது அறவே மறைந்து விடுகிறது.

நெல்லிக்காயில் அதிக அளவுக்கு,(இரண்டு ஆரஞ்சுப்பழத்தில் உள்ள அளவுக்கு) கீரையிலும், கனிகளிலும், முளைக்கப்பட்ட பயிறுகளிலும்,எலுமிச்சை, நார்த்தை ஆகிய பழங்களிலும் ஸி வைட்டமின் இருக்கிறது.

மீன் எண்ணெய், முட்டை, பால், வெண்ணெய், சூரிய வெளிச்சம் ஆகிவற்றில் டீ வைட்டமின் இருக்கிறது.

உணவுப் பிரச்சனை பரந்த பிரச்சனை; சுருங்கக் கூறியுள்ளேன்.

இப்போது கூறுங்கள் எனக்கு சாப்பிடத்தெரியும் என்று எல்லோரும் பெருமைப்பட முடியுமா? உனக்கென்ன தெரியும்? சாப்பிடத்தான் தெரியும் என்று எவரிடமும் கூறமுடியுமா?

அறியாமைதயைத் தவிர வேறு இருள் இல்லை

அறிவைத் தவிர வேறு ஒளியில்லை

விடுதலை பெரியார் மலர் 1956

திருமதி குஞ்சிதம் குருசாமி நினைவு மலர்,

30.7.1962, பக் 46-67

நன்றி: சுயமரியாதை இயக்க வீராங்கனைகள்-II

கருப்பு பிரதிகள்

Tuesday, February 10, 2009

செவித்திறன் பரிசோதனை


தமிழ்நாடு டவுன்ஸ் சின்ட்ரோம் சங்கத்தில் பதிவு செய்துள்ள 4,000-த்துக்கும் மேற்பட்ட மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் செவித் திறனை இலவசமாகப் பரிசோதனை செய்யும் திட்டத்தை சென்னை காது - மூக்கு தொண்டை மருத்துவமனையின் பேச்சு - கேள்வி இயல் பயிற்சி மய்யம் செயல்படுத்தி வருகிறது.

சென்னை மந்தைவெளியில் உள்ள இந்தப் பயிற்சி மய்யத்தில் (தொ.பே. எண்: 24939143) இந்தப் பரிசோதனைத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படுகிறது.

குழந்தை பிறந்து வளரும் நிலையில் பேச்சு வருவதற்கு செவித்திறன் நன்றாக இருப்பது அவசியம். செவித்திறனை முன்கூட்டியே பரி சோதனை செய்து, குறை இருந்தால் சிகிச்சை அளித்துச் சரி செய்துவிட வேண்டும். இவ்வாறு செய்யும் நிலையில் குழந்தையின் தகவல் - தொடர்புத் திறன் பாதுகாக்கப்படும். இது வரை 300-க்கும் மேற்பட்ட மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் செவித் திறன் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இத்தகைய திட்டத்தை நாட்டிலேயே முதல் அமைப்பாக சென்னை காது - மூக்கு - தொண்டை மருத்துவமனை செயல் படுத்தி வருகிறது - என்றார் அதன் தலைவர் டாக்டர் மோகன் காமேஸ்வரன். சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் ஒவ்வொரு குழந்தை பிறந்தவுடன், அதன் செவித் திறனை இலவசமாக பரிசோதனை செய்யும் திட்டத்தை யும் சென்னை காது - மூக்கு - தொண்டை மருத்துவமனை அண் மையில் தொடங்கியுள்ளது. ரோட்டரி சங்கத்தின் - சைலண்ட் மெலடி சாரிட்டபிள் டிரஸ்ட்- ன் உதவியுடன் இத்திட்டத்தை அது செயல்படுத்தி வருகிறது.

தேவைக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பது சிறுநீரகங்களுக்கு நல்லதா?

உடல் ஆரோக்கியமாக உள்ளவர்கள் தினமும் 2 லிட்டர் முதல் 3 லிட்டர் தண்ணீர் குடித்தால் போது மானது. மேலும் குழம்பு, ரசம், மோர் போன்ற திரவ உணவுகள் மூலமும் உடலுக்கு நீர்ச்சத்து கிடைத்து விடுகிறது.

எனக்குத் தாகமே எடுப்பதில்லை; அதனால் நான் தண்ணீரே பெரும்பாலும் குடிப்பதில்லை என ஆரோக்கியமாக உள்ள சிலர் பெருமிதமாகக் கூறிக் கொள்வது உண்டு. ஒரு சிலர் 6 மணி நேரத்துக்கு தண்ணீர் குடிக்காமல் இருப்பார்கள். இது தவறு.

ஏனெனில் ஆரோக்கியமாக உள்ளவர்கள் போதிய அளவு தண்ணீர் குடிக்காவிட்டால் உடலிலிருந்து கழிவுகள் முழுமையாக வெளியேறாது. இதனால் சிறுநீர் போகும்போது எரிச்சல் ஏற்படும். ஆரோக்கிய மாக உள்ளவர்களுக்கு தினமும் 1.5 லிட்டர் முதல் 2 லிட்டர் வரை சிறுநீர் வெளியேறினால் இயல்பு நிலை என்று அர்த்தம். இதய நோய் - சிறுநீரக நோய் பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப் படி, குடிநீரின் அளவை நிர்ணயித்துக் கொள்வது அவசியம். ஏனெனில் கூடுதல் தண்ணீர் வெளியேற்ற இதயம் அதிகமாக ரத்தத்தை பம்ப் செய்ய வேண்டி யிருக்கும்.

காலையில் எழுந்தவுடன்...: காலையில் எழுந்த வுடன் தண்ணீர் குடிப்பதில் தவறில்லை. உடலுக்கு நல்லது. நன்றாக பசி எடுக்கும். உடல் ஆரோக்கியமாக உள்ளவர்கள் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 3 லிட்டர் தண்ணீர் குடித்தால் போதுமானது. அதற்கு மேல் உடலுக்கு குடிநீர் தேவை இல்லை.

சிறுநீர் கழிக்கும் இடைவெளி...: ஆரோக்கியமாக உள்ளவர்கள் 4 முதல் 6 மணி நேரத்துக்கு ஒரு முறை தான் சிறுநீர் கழிக்க வேண்டும். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறையோ அல்லது இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறையோ சிறுநீர் கழிக்க நேர்ந்தால், அதை அடிக்கடி எனக் கொள்ளலாம். சிறுநீரகத்தில் காச நோய், மது நிறைய குடித்தல், புகைப் பழக்கம், சிறுநீர்த் தொற்று, முதுமை என அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை ஏற்படுவதற்குப் பல காரணங்கள் உண்டு.

முதுமையில் புராஸ்டேட் சுரப்பி (விந்துச் சுரப்பி) வீக்கம் காரணமாகவும் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனை ஏற்படலாம். இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முறையான சிகிச்சை தேவை.

கெடுதல் இல்லை: குளுகுளு அறையில் (ஏ.சி.) இருக்கும்போது, தேர்வு எழுதக் கிளம்பும்போது நேர்காணலுக்குக் காத்திருக்கும்போது, பெண் பார்க் கக் கிளம்பும்போது, அவசர அவசரமாக பஸ்ஸுக்கோ அல்லது ரயிலுக்கோ கிளம்பும்போது சிறுநீர் கழிக் கும் உணர்வு ஏற்படுவது இயல்பானது. இது கெடுதல் இல்லை. இதற்கு சிகிச்சையும் தேவை இல்லை.

Tuesday, January 27, 2009

செயற்கை மனிதன் - த.க.பாலகிருட்டினன்

மனிதர்கள் பலருக்கும் பல்வேறு காரணங்-களால் செயற்கை உறுப்புகள் பொருத்தப்-படுகின்றன. எடுத்துக் காட்டாக விபத்தில் கால்களை இழந்தவருக்கு செயற்கைக் கால்கள் பொருத்தப்படுகின்றன. ஆனால் அவற்றை அவர்கள் மிகுந்த உடல் முயற்சியினால்தான் இயக்க இயல்கிறது. ஆனால், தற்போது கண்டு-பிடிக்கப்பட்டுள்ள கருவியை மூளையில் பொருத்தி விட்டால், அது மூலையில் எழும் எண்ண ஓட்டங்களை மின்காந்த அலைகளாக மாற்றி செயற்கை உறுப்புகளுக்கு அனுப்பி அவற்றை மூளையின் எண்ண ஓட்டத்துக்கு ஏற்ப செயல்பட வைக்கிறது.

ஒரு நெருப்புக் குச்சியின் தலை அளவே உள்ள இந்தக் கருவியில் மிகவும் வலிமை வாய்ந்த டங்ஸ்டன் கார்பைடால் செய்யப்-பட்ட 100 சென்சார்கள் அடங்கியுள்ளன. இந்த சென்சார்கள் மயிரிழையை விடச் சிறிதளவே பெரியதாக இருக்கும். மூளையில் அமைக்கப்-படும் இந்த சென்சார்கள் மூளையின் எண்ண ஓட்டத்தைப் பெற்று அவற்றை செயற்கை உறுப்புகளுக்கு அனுப்புகின்றன. இதன் மூலம் கால்களை இழந்தவர்கள் தங்களுக்குப் பொருத்தப் பட்டுள்ள செயற்கைக் கால்களை இவ்வாறு இயங்கச் செய்து தாங்கள் இழந்-திருந்த நடமாடும் ஆற்றலைத் திரும்பப் பெற இயலும் என அறிவியலாளர்கள் எதிர்பார்க்-கின்றனர். இங்கிலாந்தின் கார்டிஃப் பல்கலைக் கழகத்தில் அமைந்துள்ள மைக்ரோபிரிட்ஜ் சர்வீசஸ் என்னும் நிறுவனம் ஆய்வு செய்து இந்தக் கருவியை உருவாக்கியுள்ளது. மைக்ரோ பொறியியல் வடிவமைப்பில் முன்னணி நிறுவனமாக விளங்கும் இது ஒன்றினால் மட்டுமே இத்தகைய மூளையில் பொருத்தப்-படும் கருவியைச் செய்ய இயலும் என்று கருதப்படுகிறது.

இது போன்று நீண்ட காலம் பயன்பட இயன்ற புதிய புதிய மைக்ரோ நீடில் சென்-சார்களை உருவாக்க வேண்டும் என்று கார்டிஃப் பல்கலைக் கழகம் அமைத்திருக்கும் இந்த நிறுவனத்தை உடா பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் கேட்டுக் கொண்டுள்-ளனர். சிலிகானுக்குப் பதிலாக டங்ஸ்டன் கார்பைடைப் பயன்படுத்தி இத்தகைய கருவிகளை உருவாக்கும் தமது நிறுவனத்தின் ஆற்றல் ஒன்றே மிகவும் இன்றியமையாதது என்று அந்த நிறுவனத்தின் டாக்டர் ராபர்ட் ஹொய்லி கூறுகிறார். மிகவும் உறுதி வாய்ந்த உலோகத்தைப் பயன்படுத்தலாம் என் அவர்களின் தேர்வே சரியானது என்பது மெய்ப்பிக்கப்பட்டுவிட்டது.

மூளையில் இருந்து கிடைக்கும் எலக்ட்ரிக் சிக்னல்களை இக்கருவி அடையாளம் கண்டு வாங்கி, அவற்றை அவை உருப்பெருக்கி, செயற்கை உறுப்புகளை இயங்கச் செய்வதற்-காக அவற்றை அனுப்புகிறது என்று ஹொய்லி தெளிவுபடுத்தினார். இத்தகைய கருவி மூளை-யில் பொருத்தப்பட்டவுடன், இதன் மூலம் சரியான பயனை அடைய சரியாக சிந்திக்க நோயாளி கற்றுக் கொள்ள வேண்டும்.

இதற்கான பயிற்சி பெற பல வார காலம் ஆகும் என்றாலும், தாமாக பரிசோதனைக்கு முன்வந்த நோயாளிகளிடம் இக்கருவி பயன்-படுத்தப்-பட்ட போது நம்பிக்கை தரும் விதத்தில் அவற்றின் செயல்பாடுகள் இருந்தன. ஒரு செயற்கை மனிதன் என்று மக்கள் அழைப்பதாகவே இதன் பயன் இருக்கும் என நான் கருகிறேன் என்று ஹொய்லி கூறினார் என்று டெலிகிராஃப் இதழ் தெரிவிக்கிறது.

விபத்துகளில் முதுகுத் தண்டு செயலிழந்து போகும் நோயாளிகளுக்கு எதிர்காலத்தில் இந்தத் தொழில் நுட்பம் பெரு-மளவுக்கு உதவக்-கூடும். காயம் அல்லது சேதத்தைச் சரி செய்யும் விதத்-தில் இக் கருவி முதுகுத் தண்டின் மீது பொருத்தப்பட்டு, எவ்வாறு இயங்குவது என்பதை மறுபடியும் கற்றுக் கொள்ள அனுமதிக்கிறது.

http://files.periyar.org.in/unmaionline/2009/january/01-15_2009/page17.php?0945-560_%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88_0000-1100_01-15_2009

எலும்புகள்-மு.குருமூர்த்தி


man_bones நமது உடலில் தோலையும் தசையையும் நீக்கிவிட்டால் மிஞ்சுவது எலும்புக்கூடுமட்டுமே. எலும்புக்கூட்டிற்கு எலும்புச்சட்டம் என்று பெயர்.

bones_ உடலுக்கு ஆதாரமாகவும் தசை நரம்புகளுக்கு பற்றுக்கோடாகவும் இருப்பது எலும்புக்கூடுதான். மூளை, கண், இதயம், நுரையீரல் போன்ற மென்மையான உறுப்புகளுக்கு பாதுகாப்பாக இருப்பதும் இந்த எலும்புச்சட்டம்தான். எலும்பில் 50% நீரும், 33% உப்புக்களும், 17% மற்ற பொருட்களும் உள்ளன. எலும்பில் கால்சியம் பாஸ்பேட் போன்ற அமிலத்தில் கரையக்கூடிய தாதுப்பொருள் மற்றும் தீயில் எரிந்துபோகும் கரிமப்பொருளும் உள்ளன. நமது உடல் நலத்திற்கு வேண்டிய கால்சியம் எனும் இரசாயனப்பொருட்கள் எலும்புகளில்தான் சேமித்து வைக்கப்படுகிறது.

எலும்புகள் ஒன்றுடன் ஒன்று பொருந்தி இருந்தால்தான் சீரான முறையில் அவைகள் செயல்பட முடியும். அவ்வாறு பொருந்தும் இடங்களுக்கு மூட்டுகள் என்று பெயர்.

bones மூட்டுகள் இரண்டு தன்மைகள் உடையனவாக இருக்கின்றன. முதலாவது அசையும் மூட்டு. இரண்டாவது அசையா மூட்டு. இடுப்பிலும் மண்டையிலும் காணப்படும் எலும்புகள் அசையாத மூட்டுகள். அசையும் மூட்டுகளில் நான்கு வகைகள் உள்ளன. பந்துக்கிண்ண மூட்டு, கீல் மூட்டு, வழுக்கு மூட்டு, செக்கு மூட்டு என்று அவைகளுக்குப்பெயர்.

அசையும் மூட்டுகள் இயங்கும்போது அதிர்ச்சியோ தேய்வோ ஏற்படாமல் இருப்பதற்காக, எலும்புகளின் முனைகள் குருத்தெலும்புகளால்மூடப்பட்டு, அதன் உட்புறத்தில் ஒரு மெல்லிய திசுப்படலம் இருக்குமாறும் அதில் ஒரு வழுவழுப்பான திரவம் சுரக்குமாறும் அமைக்கப்பட்டுள்ளது. மூட்டுகள் அசையும்போது எலும்புகள் நழுவக்கூடும். அவ்வாறு நழுவாமல் இருக்க மூட்டுகள் உறுதியான தசைநார்களால் கட்டப்பட்டுள்ளன.

தகவல்: மு.குருமூர்த்தி

- மு.குருமூர்த்தி (http://www.sciencedaily.com/releases/2008/11/081126133409.htm)

http://www.keetru.com/science/environment/Gurumoorthy_10.php