Thursday, March 5, 2009

உண்ணத் தெரியுமா? - திருமதி. டி.எஸ்.குஞ்சிதம் குருசமி பி.ஏ.எல்.டி

நீ பெரிய சாப்பாட்டு இராமன்; மூக்கை பிடிக்க சாப்பிடத்தான் தெரியும்என்று அடிக்கடி கேட்கிறோமல்லவா? இது ஒரு தப்பான பாராட்டுரை.ஏனேனில் 100 க்கு 99 பேர்ருக்கு சரியாக சாப்பிடத் தெரியாது.

கால் நடைகளுல், பறைவகளுல், மற்ற உயிர்களும் கூடத்தான் தங்கள் பசி தீர்வதற்காக எதையோ தின்று கொண்டிருக்கின்றன. இவைகளைப் போல் மனிதனும் கிடைத்ததைத் தின்று கொண்டிருந்தால் போதுமா?

நம் நாட்டில் போதிய அளவு உண்பதற்கே பலருக்கு உணவு கிடைப்பதில்லை. இந்நிலையில் நல்ல உணவாக சாப்பிட வேண்டும், சத்துள்ள உணவாக சாப்பிட வேண்டும் என்றெல்லாம் கூறினால் எத்தனை பேரால் முடியும்?

உலகில் மிகுந்த மரணவிகிதமும், குறைந்த வயதில் மரணம் நேரிடுவதும் உள்ள நாடு இந்தியாதான். காரணம், வறுமை மட்டுமல்ல நோய் நொடிகளும் கூட நோய்களில் பெரும்பாலாவை உணவினால் ஏற்படுகின்றது என்பது உலக உணவாராய்ச்சி நிபுணர்களின் முடிவு.

உண்ணத்தெரிதல்

ஏழைகளாயிருப்பவர்கள்கூடத் தம் வசதிக்கேற்ற அளவுக்காவது நல்ல முறையில் சாப்பிடத் தெரிந்து கொள்ள வேண்டும்.

உதாரணமாக, விலை உயர்ந்த ஆப்பிளும், ஆரஞ்சுப்பழமும் தின்னமுடியாவிட்டாலும், இவைகளில் எந்த வகையிலும் குறைவில்லாத உயிர்ச்சத்துக் (வைட்டமின்) கொண்ட வாழைப்பழம், மிகுந்த அளவுக்கு உப்புச்சத்தும்(மினரல்ஸ்), சுண்ணாம்புச் சத்தும்(கால்சியம்) உயிர்ச்சத்தும் கொண்ட முளைக்கீரை- அரைக்கீரை கூடவா ஏழைக்கு கிடைக்காது?எல்லாப் பருப்புகளிலும் மிகுதியான பிசிதம்(ப்ரோட்டின்) என்ற சத்துக் கொண்ட வேர்கடலை கூடவா ஏழைக்கு கிடைக்காது?

ஆதலால் எவ்வளவு உண்ண வேண்டும் என்பதல்ல முதன்மை! எதையுண்ண வேண்டும்?என்பதில்தான் முதன்மை இருக்கிறது.

நல்ல உடற்கட்டோடு வாழ்வதற்கு பல்வகைச் சத்துகளும்ஏறத்தாழ விகிதாசார அளவுக்காவது இருக்கக்கூடிய உணவை உட்கொள்வதுதான் அறிவுடைமை. மனிதன் பகுத்தறிவு உடையவன் என்பதற்கு மற்றத்துறைகளில் எப்படி இருந்தாலும் உயிர்வாழ்வதற்கு முதன்மையான உணவோடாவது அறிவோடு நடந்து கொள்ள வேண்டாமா? மாட்டுக்கு தெரியாது, வெறும் வைக்கோலில் மட்டும் சத்தில்லை என்ற உண்மை; பருத்திக் கொட்டையும் ,புண்ணாக்கும், தவிடும், பசும்புல்லும் கலந்து தின்றால்தான் தன் உடல் சீர்பட்டிருக்கும் என்று தெரியாது. ஆனால், மனிதனுக்கு தெரிய வேண்டாமா, வெறும் சோற்றில் மட்டும் சத்துக் கிடையாது என்ற உண்மை?

சீரான உணவு

சீரான உணவில் என்னென்ன இருக்க வேண்டும்?

தானியம்

14 அவுன்ஸ்

பருப்பு வகை

3 அவுன்ஸ்

கீரை வகை

4 அவுன்ஸ்

கிழங்கு வகை

3 அவுன்ஸ்

காய்கறி

3 அவுன்ஸ்

பழவகை

3 அவுன்ஸ்

பால்

10 அவுன்ஸ்

சர்க்கரையும் வெல்லமும்

2 அவுன்ஸ்

நெய், எண்ணெய்

2 அவுன்ஸ்

மீனும் இறைச்சியும்

3 அவுன்ஸ்

முட்டை

1 (ஒன்று)

சத்துணவு ஆராய்ச்சி குழுவின் முடிவுதான் மேலே குறிப்பிட்டுள்ளது.

உணவில் இத்தனை வகைகளா இருக்க வேண்டும்?என்று கேட்கலாம். ஆம்! ஆம்! நூறு தடவை ஆமாம்!

ஒரு உணவுப் பொருளில் இருக்கும் சத்து மற்றொன்றில் இல்லை. ஆதலால்தான்.

உணவுப்பொருளகளில், நீர், பிசிதம்(ப்ரோட்டின்), கொழுப்பு(ஃபாட்), மாச்சத்து (கார்போ ஹைட்ரேட்), உப்புச்சத்து(மினரல்ஸ்), உயிர்ச்சத்து(வைட்டமின்) ஆகிய ஆறுவகை சக்திகள் இருக்கின்றன. இந்த ஆறும் சரியான அளவுக்கு கலந்துள்ள உணவுதான் சிறப்பான உணவு.

ஆறின் விளக்கம்:

1) நீர்: நம் உடற் கூற்றின் முக்கால் பங்குக்கு மேல் நீர்தான்; குருதியில் 90% நீர்தான்; போதுமான அளவுநீர் அருந்தாவிடில் மலச்சிக்கல் ஏற்படும். கொதித்து, ஆறிய, வடிகட்டிய நீர், நாளும் குறைந்தது 8 டம்ளராவது குடிக்க வேண்டும்.

2) ப்ரோட்டின்: இதை பிசிதம் என்றும் புரதம் என்றும் தமிழில் கூறுவதுண்டு. உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாதது; உணவு ஆற்றல்களிலேயே சிகரமாயுள்ளது; மனிதனின் ஆற்றலில் அடிப்படியானது; நடுத்தர வயதுள்ள மனிதனுக்கு, நாள் ஒன்றுக்கு சுமார் இரண்டு பலம் எடையுள்ள புரதமாவது உடலில் சேர்வது மிகவும் தேவையானது. இது மிகுந்துள்ள பொருட்கள்- இறைச்சி, மீன், முட்டை, பால், பருப்புவகை, கொட்டைவகை(பாதாம் பருப்பில்21%ம், வேர்க்கடலையில் 27%ம், அரிசியில் 6%ம், கோதுமையில் 12%ம் உண்டு).

3) கொழுப்பு: நம் உடல் உறுப்புகள் அன்றாடம் தம் பணியை செய்வதற்கான ஆற்றலை வழங்குவது இது. பெரும்பாலான இந்திய உணவு வகைகளில் இந்த சத்து மிகக் குறைவாகவே இருக்கிறது. எண்ணெய் வித்துகள், கொட்டைகள், வெண்ணெய், நெய் முதலியவற்றில் மிகுந்திருக்கிறது. நல்லெண்ணெயிலும், வேர்க்கடலையிலும் பெரிய அளவுக்கு இருக்கிறது.

4) மாச்சத்து: மனித இயந்திரத்தை இயக்குவிக்கின்ற முக்கியமான சத்து இது. உணவுத்தானியங்கள், கிழங்குகள், வெல்லம், சர்க்கரை, க்ளுகோஸ் முதலியவற்றின் 100 க்கு 100 இந்த மாச்சத்து இருக்கிறது.

5) உப்புச்சத்து: இதை கனிமப்பொருள் என்றும் கூறுவர். மேலே கூறிவற்றைப்போல் உடலுக்கு ஆற்றல் ஊட்டக்கூடியதல்ல இது. எலும்பு, பல் முதலியவற்றை உறுதியாக்குவதற்கு பயன்படுகிறது. நம் உடலில் சுண்ணம்புச்சத்து, இரும்புச்சத்து, கனலம்(பாஸ்பரஸ்) முதலிய முப்பதுக்கும் மேற்பட்ட கனிமப்பொருள்கள் உள்ளன. சுண்ணாம்புச்சத்தும், இரும்புச் சத்தும் கீரையில் ஏராளமாக இருக்கின்றன. அடுத்தபடியாக கேழ்வரகு, பருப்பு இவைகளிலுமிருக்கின்றன.

6) உயிர்ச்சத்து(வைட்டமின்): இது ஏ, பி, சி, டி, இ, கே என்று பிரிக்கப்பட்டிருக்கிறது, உடம்பில் நோயில்லாமல் இருப்பதற்கு இச்சத்து இன்றியமையாததயிருக்கிறது. கொழுப்பில் கரைகின்ற உயிர்ச்சத்து, தண்ணீரில் கரைகின்ற உயிர்ச்சத்து என இரு வகைகளாக இதைப் பிரிக்கலாம். வெண்ணெய், முட்டை மஞ்சள் கரு, ஈரல், மீன், இறைச்சி, கீரைகள், காரட், தக்காளி, ஆரஞ்சு, மா, பலா, பப்பாளி ஆகிய பழங்களிலும் வைட்டமின் மிகுந்திருக்கிறது.

மிகவும் தீட்டப்படாத தானியங்கள், பருப்புகள், கொட்டைகள், முட்டை, இறைச்சி முதலியவற்றில் பி வைட்டமின் மிகுந்திருக்கிறது. தவிட்டுடன் கூடிய அரிசியை புழுங்களாகவும், பொங்கியும் உண்டால் பி வைட்டமின் சுமாரளவுக்கேனும் கிடைக்கும். இன்று 100க்கு 99 பேர்களால் உண்ணப்படுகின்றசலவைச் சோற்றில் (தவிடு நீக்கப்படுவதானாலும்) இது அறவே மறைந்து விடுகிறது.

நெல்லிக்காயில் அதிக அளவுக்கு,(இரண்டு ஆரஞ்சுப்பழத்தில் உள்ள அளவுக்கு) கீரையிலும், கனிகளிலும், முளைக்கப்பட்ட பயிறுகளிலும்,எலுமிச்சை, நார்த்தை ஆகிய பழங்களிலும் ஸி வைட்டமின் இருக்கிறது.

மீன் எண்ணெய், முட்டை, பால், வெண்ணெய், சூரிய வெளிச்சம் ஆகிவற்றில் டீ வைட்டமின் இருக்கிறது.

உணவுப் பிரச்சனை பரந்த பிரச்சனை; சுருங்கக் கூறியுள்ளேன்.

இப்போது கூறுங்கள் எனக்கு சாப்பிடத்தெரியும் என்று எல்லோரும் பெருமைப்பட முடியுமா? உனக்கென்ன தெரியும்? சாப்பிடத்தான் தெரியும் என்று எவரிடமும் கூறமுடியுமா?

அறியாமைதயைத் தவிர வேறு இருள் இல்லை

அறிவைத் தவிர வேறு ஒளியில்லை

விடுதலை பெரியார் மலர் 1956

திருமதி குஞ்சிதம் குருசாமி நினைவு மலர்,

30.7.1962, பக் 46-67

நன்றி: சுயமரியாதை இயக்க வீராங்கனைகள்-II

கருப்பு பிரதிகள்

1 கருத்துரைகள்:

ஆ.ஞானசேகரன் said...

உணவே மருந்து, உடல் நலம்காண முறையான உணவு பழக்கம் வேண்டும் எனபதும் சரியே