Monday, July 21, 2008

உடல் அறிவோம்-உணவு மண்டலம்

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் - நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.
என்பது வள்ளுவர் வாக்கு, பகுத்துண்டு என்ற சொல்லுக்கு இரு அர்த்தம் உண்டு. பகிர்ந்து உண்ணுதல் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. எது நம் உடலுக்கு ஏற்ற உணவு என்பதை அறிந்து உண்பது மற்றொன்று. உணவு சுவைமிகுந்து இருந்தால் மட்டும் போதாது. சத்தானதாக இருக்க வேண்டும். சத்தான உணவே நம் உடலுக்கு நல்ல ஆரோக்கியம் தரும்.

உணவில் உள்ள சிக்கலான, கரையாத, பெரிய மூலக்கூறுகள் எளிமையான, கரையும் சிறிய மூலக்கூறுகளாக மாற்றப்படும் செயலே செரிமானம் ஆகும். இனி நம் உணவு மண்டலத்தைப் பற்றி பார்ப்போம். இது வாயில் துவங்கி மலத்துளையில் முடிவடைகிறது. நாம் உணவை வாயில் மூலம் உட்கொள்கிறோம். வாயில் உள்ள நாக்கு சுவை அறியவும், பற்கள் உணவை சிறு சிறு துண்டு களாக வெட்டவும் பயனாகின்றன. புழு பூச்சி களுக்கு கூட பல் இல்லாவிட்டாலும் அதன் வேலையைச் செய்ய ஒரு ஜோடி மேன்டிபிள் என்ற உறுப்பால் உணவைத் துண்டாக்குகின்றன. யானைக்கு இருக்கும் தந்ததும் அதன் முன் வெட்டுப்பல்தான். நாய்க்கு 42ம், எலிக்கு 16ம் மனிதனுக்கு 32 பற்களும் உள்ளன. வெற்றிப் பாக்கு, புகையிலை, சிகரெட் போன்ற பழக்கம் உடையவர்களுக்கு பற்களில் கறை ஏற்பட்டு சொத்தைப் பல்லாகிறது. சாப்பிடும்போது நம் பற்களைப் பயன்படுத்தி உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். சாப்பிட்ட பின் வாய் கொப்பளிப்பதும் அவசியம். பல் இடுக்குகளில் உள்ள உணவுத் துகள்கள் மூலம் பல நோய்கள் வர வாய்ப்புண்டு. எனவே தினமும் இருமுறை பல் துலக்கினால் 80 வயதானாலும் ஒரு பல்கூட விழாது.

சாதாரணமாக முதுகெலும்புகள்ள பிராணிகளுக்கு 4 ஜோடி உமிழ்நீர் சுரப்பிகள் காணப்படும். ஆனால் மனிதனுக்கு 3 ஜோடி உமிழ்நீர்ச் சுரப்பிகளே உள்ளன. 1 ஜோடி பரோடிட் சுரப்பிகள். கன்னத்திலும், 1 ஜோடி சப்மேன்டிபுலார் சுரப்பிகள் தாடைக்கு கீழும், 1 ஜோடி சப் லிங்குவல் சுரப்பிகள் நாக்கின் கீழும் காணப் படுகின்றன. பரோடிட் சுரப்பியில் உள்ள சிரஸ் செல்கள் டயலின் என்ஸைமைச் சுரக்கின்றன. இவை பாக்டீரியாவை அழிக்க வல்லன. வைரஸ்களால் இச்சுரப்பிகள் பாதிக்கப்படும் போது கன்னப் பகுதி வீங்கி, அம்மை நோய் ஏற்படுகிறது.

தினமும் 1 முதல் 1.5 லிட்டர் உமிழ்நீர் உற்பத்தி செய்யப்படுகிறது. வாயை ஈரப்பதமுள்ளதாக்குவதற்கும் தாகத்தைக் குறைக்கவும், வெப்பமான பொருட்களை குளிராக்கவும் உமிழ்நீர் பயனாகிறது.

நாக்கில் உள்ள சுமார் 3000 சுவை அரும்புகள் மூலம் உணவின் சுவை அறிகிறோம். அமீபாவுக்கு இவை உடல் முழுவதும், ஹைடிராவுக்கு அதன் உணர் கொம்புகளிலும், மீன், தவளைக்கு தோல் முழுவதும், பட்டாம் பூச்சி, தேனீ மற்றும் ஈக்களுக்கு கால் நுனியிலும் சுவை அரும்புகள் உள்ளன. நாவின் கீழே உள்ளது. தொண்டைப் பகுதி, உணவை உணவுக் குழாய்க்கும், காற்றை குரல் வளைக்கும் அனுப்புவது இதன் வேலையாகும். நாம் தலைகீழாக இருந்து கொண்டு சாப்பிட்டாலும் உணவு வயிற்றுக்கு வந்துவிடுவது உணவுக் குழாயின் தசை இயக்கத்தினாலே தான். இத்தசைகளின் அசைவினாலேயே உணவு இரைப்பையை அடைகிறது. இரைப்பையில் உணவு சுமார் 3 மணி நேரம் தங்கியிருக்கும். இது ஒரு ஜெ (J) வடிவ உறுப்பாகும். இரைப்பை, இரைப்பை நீரைச் சுரக்கிறது. மேலும் இரைப்பையில் சுமார் 3 கோடியே 50 இலட்சம் இரைப்பைச் சுருப்பிகள் உள்ளன. இச்சுரப்பிகளில் உள்ள சிப் (Chief Cells) செல்கள் பெப்சின், ரெனின் மற்றும் ஜெலாட்டி னேஸ் ஆகிய என்சைம்களைச் சுரக்கின்றன. ஆக்சிண்டிக் செல்கள் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை உற்பத்தி செய்கின்றன. இரைப்பை நீரில் 99.45 சதவிகிதம் நீரும் 0.4 - 0.5 சதவிகிதம் இவ்வமிலமும் உள்ளன. நம் உணவில் உள்ள பாக்டீரியங்களை ஹைட்ரோ குளோரிக் அமிலம் அழித்து உணவு நச்சாவதைத் தடுக்கிறது. இரைப்பையில் சுமார் 1.5 முதல் 2 லிட்டர் இரைப்பை நீர் தினமும் சுரக்கிறது. சரியான நேரத்திற்கு நிண்ட நாட்கள் சாப்பிடும் பழக்கம் இல்லாதவர்களில் குடல் சுவர் அமிலத்தால் பாதிக்கப்படுகிறது. எனவே, வாய், தொண்டை, உணவுக் குழாய், இரைப் பையில், புண் உண்டாகிறது. இதுவே அல்சர் என அழைக்கப்படுகிறது. நேரத்திற்கு சாப்பிட்டால் அல்சர் வராது.
உணவுப் பாதையில் கணையம் மற்றும் கல்லீரல் ஆகிய உறுப்புக்கள் சுரக்கும் பொருட்களும் உணவைச் செரிக்க உதவுகின்றன. கல்லீரல் பித்த நீரைச் சுரக்கிறது. பித்த நீரில் உள்ள பித்த உப்புக்கள் கொழுப்பை சிறுசிறு துகள்களாக மாற்றுகின்றன. பித்த நீரை உற்பத்தி செய்யும் செல்களுக்கு பேரன்கைமா செல்கள் என்று பெயர். இவை பித்தப்பையில் சேமித்து வைக்கப்படுகின்றன. தினசரி 500 மிலி முதல் ஒரு லிட்டர் வரை பித்த நீர் உற்பத்தி யாகிறது.

கணையம், கணைய நீரைச் சுரக்கிறது. தினமும் சுமார் ஒரு லீட்டர் கணைய நீர் நம் உடலில் உருவாகிறது. வாகஸ் நரம்பும், பேன்கிரியோசைனின் செக்ரீடின் போன்ற ஹார்மோன்களும் கணைநீர் உற்பத்தியை சீராக்குகின்றன. கணைய நீர் கொழுப்பு துகள்களை திரவ நிலைக்கு மாற்றுகிறது. மேலும் இதில் உள்ள 5 வகையான என்சைம் களும் உணவைச் செரிக்க உதவுகின்றன.
இரைப்பையிலிருந்து உணவு, சிறுகுடலை அடைந்து சுமார் 10 மணி நேரம் இங்கு தங்குகிறது. சிறு குடலிலும் 6 வகையான நொதிகள் சுரக்கின்றன. சிறு குடலின் முன் பகுதியில் உணவுச் செரிமானம் முற்றுப் பெறுகிறது. பின் பகுதியில் உள்ள சுமார் 50 லட்சம் குடல் உறிஞ்சிகள் செரிக்கப்பட்ட உணவை உறிஞ்சி இரத்தக் குழாய்களுக்கு அனுப்பும். சிறுகுடல் பெருங்குடலுடன் இணையும் இடத்தில் உள்ள வேலையற்ற சிறு புழுபோன்ற அமைப்பு குடல் வால் என அழைக்கப்படுகிறது. உணவில் உள்ள தலை முடி, மற்றும் முள், நார் ஆகிய பொருட்கள் ஏதேனும் இப்பகுதியில் சிக்கிக் கொண்டால் அப்பகுதி புண்ணாகி வீக்கம் ஏற்படுகிறது. இது சிலருக்கு பெரிதாகி சிறுகுடலையே பாதிக்கும் அளவுக்கு ஆபத்தாக முடிகிறது. இதனையே அப்பெண்டிசிடிஸ் என அழைக்கிறார்கள்.
பெருங்குடலில் வேலை செரிக்கப்படாத உணவில் உள்ள நீரை உறிஞ்சுவதே ஆகும். பெருங்குடலின் பிற்பகுதியில் உள்ள மலக் குடலின் தசை இயக்கத்தினால் செரிக்கப்படாத உணவு மலமாக, வெளியேறுகிறது. மலம் மஞ்சள் நிறமுள்ளது. பித்த கிறுமிகள் உடலில் உள்ள உணவில் கலப்பதே மலம் மஞ்சளாக மாறக் காரணமாகும்.
மலத்தின் கெட்ட வாசனைக்கு இதில் உள்ள இண்டோல் மற்றும் ஹைடிரஜன் சல் படு போன்ற வேதிப் பொருட்களே காரணம். சாதாரண மனிதன் ஒரு நாளைக்கு சுமார் 75 முதல் 170 கிராம் மலத்தை வெளியேற்று கிறான். மலம் 70 முதல் 75 சதவிகிதம் நீராலும் எஞ்சிய திடப்பொருட்களாலும் ஆனது.

http://www.viduthalai.com/periyarpinju/200805/page07.html

0 கருத்துரைகள்: